ஹைதராபாத்: கர்நாடக-ஆந்திர எல்லையிலுள்ள, மந்திராலயாவிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
ராகவேந்திர சுவாமி மீது ரஜினிக்கு அளப்பரிய பக்தி உண்டு. நடிகர்களின் திரை வாழ்க்கையில் மைல் கல் என்பது அவர்கள் நடித்த 100வது படம்தான். ரஜினியின் 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்''. இதில் ராகவேந்திரர் சுவாமி கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். நடிப்பு திறமைக்காக ரஜினி பேசப்பட்ட படங்களில் ஸ்ரீராகவேந்திரரும் முக்கியமான ஒரு படம்.
ப்படி பக்தி கொண்ட ரஜினி தற்போது அக்கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த தினமாகும். எனவே ராகவேந்திரர் சுவாமி கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்திருக்கலாம் என தெரிகிறது. பிறந்த நாளையொட்டி ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ள நிலையில் அவர் ராகவேந்திர சுவாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளது அதுகுறித்து யூகங்களை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கோயிலில் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமை பூசாரி, ரஜினியின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து, பிரசாதங்கள் தந்தனுப்பினார்.